Monday, January 2, 2012

மெய்வழி சாலை ஆண்டவர்கள் திரு வரலாறு

* ஆதியே துணை

மெய்வழி சாலை ஆண்டவர்கள் திரு வரலாறு பிற்காலத்தில், தவ ஏற்றம்கொண்டு சர்வ சன்னததாலங்கிர்தராக உருவெடுத்த மெய்வழி தெய்வம், அன்று பாண்டிவள நாட்டில், அதாவது தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில், மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரில் 19 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1857 ஆம் ஆண்டில்) அவதரித்தார்கள். கொங்கு வளநாட்டில் அதாவது தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் திங்களூர் - பெருந்துறை, காசுக்காரன் பாளையத்தில், நெல் வணிகம் செய்து செல்வ செழிப்போடு இல்வாழ்க்கையில் இருந்து வந்த காலத்தில், ஆதி ஊழிவிதி தேவ தீர்மானப்படி, தேவநாட்டிலிருந்து வழிவழியாக வந்த தனிகை மணி வள்ளல் என்னும் பழம் பெரும் பிரம்ம சொரூப மாமுனிவர் அவர்களை 1901 ஆம் ஆண்டில் சந்தித்து, அச்செம்மலின் திருவருளுக்குப் பாத்திரமாகி, அவருடன் துறவு பூண்டு எழுந்தார்கள். தமது பெரிய வியாபாரத்தையும், இளம் மனைவியையும், பால் மனம் மாறா பெண் குழந்தையையும் விட்டு விட்டு பிரிந்து, ஏழை வடிவினராய் துறவு கோலத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். தனிகை மணி வள்ளல் அவர்களுடன் இருபத்து மூன்று ஆண்டுகள் உடன் இருந்து நாடெங்கும் அகிலவலம் வந்து, பூரண ஞான தேவ வடிவு வேத போத ரகசியங்களையும், பூட்டப் பெற்றிருக்கும் தேவ திருவருள் தெய்வ ஆதின பாரம்பரை கட்டுத் திறவுகோலையும் கைவசம் பெற்று பூரண மெய்ஞ்ஞானி ஆகினார்கள். வடலூர் வள்ளற் பிரானுக்கு பூரண ஞான செல்வத்தைத் தந்து, அவரை உயர் ஞானியாக்கியவர், ஆண்டவர்களின் குருக்கொண்டலரான இந்த தனிகைமணி ஞான செம்மலே ஆவார்கள். இவர்களே தான், வள்ளலார் மறைவுக்கு (1874) பிறகு 27 ஆண்டு காலம் காத்திருந்து ஆண்டவர்களைக் கண்டெடுத்து ஞான பிரகாசத்தை அருளி பிரம்ம சொரூபியாக மாறச் செய்தார்கள். தொடர்ந்து ஆண்டவர்களுக்கு ஓர் அருந்தவ கட்டளையிட்டு, திருக்கயிலாய நாட்டு வேத விதிப்படி தன்னிகரற்ற மேருகிரி தவத்தில் ஆண்டவர்களை அமரச் செய்தார்கள். ஆண்டவர்களும் நெடுநாள் அன்ன ஆகாரமின்றி நிர்விகார ரகிதநிலையாசன தவக்கோலத்தில், கடுந்தியான முகத்திலிருந்து, கைவல்யபதம் அடையப் பெற்று, நித்திய ஜீவ மகா முனிவராகினார்கள். தனிகைமணி வள்ளல் அவர்களும், தேவமகா சபையில் தாம் முன்னரே வாக்கு தந்தபடி நீதித்தீர்ப்பு நடத்தும் பெரும்பார அருங்காரண செயலை ஆண்டவர்களிடம் ஒப்பிவித்து, மனுக் கோடிகளுக்கு கதிமோட்சம் தரும் பாசுபத கங்கண முத்திரையையும் அவர்களுக்குப் பதிப்பிக்கச் செய்தார்கள். மேலும், சர்வக்ஞ தன்மை கொண்ட இந்த ஞான செல்வத்தை, உலகம் முழுவதும் உய்யும்படி செய்து அனைவரையும் ஆட்கொள்ளும்படி ஆண்டவர்களுக்கு ஆணையிட்டு ஆசீர்பதித்தார்கள். ஆண்டவர்களும், தமது குரு கொண்டலர் அவர்களின் ஆக்ஞைபடியே, உலக மக்களை உய்விக்க, கலிவலி தொலைத்து தலையுகப் பயிர் ஏற்றும் பணிக்கென்றே, மெய்வழிச்சபையை உண்டு பண்ணி, இறைதிருவடிசேர் பெருநெறியில் கி.பி.1923 ஆம் ஆண்டு முதல் மக்களைச் சேர்த்து அனந்தாதி தேவ குலமாக்கினார்கள் மேலாம் பதம் தரும் ஜீவரட்சிப்பு அருள் உபதேசங்களை, உயிரினிமை உணவாக உலக மக்களுக்குத் தந்து, அனைவருக்கும் ஜீவ ஆவி அறிவானது எழும்பி மீறி ஏறிபூரிக்கின்ற அருள் அமுதத்தினை அருந்த அருந்த தந்தார்கள். ஞானப் பயிரேற்றம் செய்ய மெய்வழிச் சாலை என்ற ஊரையே உண்டு பண்ணினார்கள்.

1 comment:

venkatesh said...

ஐயா ஏன் தணிகை மணிபிரானுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்தார்கள், தங்கத்தை தன்னுடைய 80 வயதில் பதிக்க காரணம்? ஏன் இரண்டு திருமணம்?? மேல்சபை, கீழ் சபை?