Friday, March 30, 2012

அருண்மணி இதயமும் திருமறை உதயமும்


*
ஆதியே துணை

அருண்மணி இதயமும் திருமறை உதயமும்


குறிப்பு: இது 1926 ம் ஆண்டு நிகழ்ந்தது.

Excerpt from "பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவரலாறு"
னூலாசரியர்: மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்நர், M.A.B.Ed.


இவ்வுலக மக்கள் அனைவரும் உய்கதியடைய மெய்வழி நிறுவிய எங்கள் பெருமான், எண்ணிலடங்காக் கொடுமைகளுக்கு இலக்காகி, தாங்கொணாத் துயரம் அனுபவித்த காலை, தாம் அவதாரம் எடுத்து பூவுலகிற்கு வந்ததற்கான ஓர் அடையாளத்தையாவது கட்டாயம் ஏற்ப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு நூலை எழுதினார்கள்.

அவ்வேதமணி ஆழியில் விளைந்த முதல் கட்டாணி முத்து "மெய்வழி நூல்". அதன் முதற்காப்பு செய்யுள் வருமாறு:


"விண்ணும் மண்ணும் கதிர்மதியும் மின்பனிதா ரகயும்
விளங்குவன மலைகளுடன் விரிந்த குலா சலங்கள்
எண்ணமடங் காதசரா சரங்களுயிர் யாவும்
இதுவிதுக்கு மிப்படியென் றிருந்தரசா ளிறைவன்
என்னகமுன் திருப்பாத மிலங்கும்பொதி மலையில்
இருத்தியெனை திருத்திதவ நிறுத்தியசற் குருவாய்
மண்ணடங்காப் பாவியென்றன் மீதிலன்னா ளிறங்கி
மனந்தளிர மரபில் வந்த மௌனகுரு காப்பே!"


53 பாடல்கள் அடங்கிய இந்நூலை அதுகாலம் திருப்புத்தூரில் இருந்த மிகச்சிறந்த இலக்கணத் தேர்ச்சியுடைய வித்துவான் ஒருவரிடம் எங்கள் பெருமான் காட்டினார்கள். அவர் முதல் காப்புச் செய்யுளைப் படித்துப் பார்த்தார். சொல்நயம், பொருள்நயம், சந்தம், யாப்பு முறை ஆகியவற்றை ஆழ்ந்து படித்து பார்த்தார். ஆண்டவர்களின் திருமுகத்தையும், நூலையும் மாறி மாறி பார்த்தார். பார்த்துவிட்டுத் "தாங்கள் யார் ?" என்று கேட்டார். ஆண்டவர்கள், தம்மைச் சாதாரணமாகக் கூறிக்கொண்டார்கள். ஆயின் அப்புலவரோ, எழுதப்பட்ட பாடலின் உட்பொருளை உணர்ந்து, வந்தவர் சாதாரணமானவரல்லர் என்று புரிந்துகொண்டார். அதற்க்கான விளக்கத்தையும் தந்தார்.

முதல் நூல்
முதல் நூல்
    
"பெரியீர்! நீங்கள் மண்ணுலகத்திற்கு உரியவரல்லர், விண்ணவர். தமிழ் புலவர்கள் ஒரு நூல் எழுதும் போது, எழுதத் தொடங்கும் முதற்சொல், பூ, உலகு, சீர் என்ற மங்களச் சொற்கள் அமையுமாறு தொடங்கி எழுதுவார்கள். 'விண்' என்று தொடங்கி எழுதிய முதற்புலவர் தாங்கள்தான். அத்துடன் இப்பாடலில் படைப்பனைத்தையும் திரட்டிப் புகுத்திவைத்துவிட்டீர்கள்.சர்வ வேத வேதாந்தக் கருத்துகளும் இதனுள் பொதிந்திருக்கின்றன. ஞான மகா ரகசியங்களை இந்நூலில் அற்புதமாக விளக்கியருளியுள்ளீர்கள். அதனால்தான் தாங்கள் அந்த ஆதி முதல்வரா? முக்கண்ணனா? அகத்தியர்க்குத் தமிழ்தந்த திருமுருகப் பெருமானா? கலைவாணியா? என்றெல்லாம் வியந்து கேட்க வைக்கிறது இந்த நூல்.

இஃது ஆறு மூவசைச் சீரும் இரண்டு ஈரசைச் சீரும் விரவிய எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம். கலித்தளை விரவிய தாழிசை. நீங்கள் நிச்சயமாக மனித தேகத்தில் வந்த தேவன். அதனால்தான் நீங்கள் யாரென்று கேட்டேன்.

இது சர்வ வேதாந்தம்.சித்தாந்தம், சமயம் கடந்த சர்வாகமம். இவ்வளவு மாட்சிமையுடைய ஞானக் களஞ்சியப் பெட்டகத்தை இயற்றிய தாங்கள் மண்ணடங்காப் பாவி என்று தாழ்மைத் தகமையுடன் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்ளும் போது இமயத்தின் மேலாக உயர்ந்து நிற்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன்" என்றார்.

இங்ஙனம் இயற்றப் பெற்றப் பெற்ற மெய்வழி நூல் 1926 ல் மதுரை வேணுகோபால் அச்சியந்திர சாலையில் அச்சிடப் பெற்று முதல் பதிப்பு வெளியாயிற்று.

அந்த காலத்தில் சுதேசமித்திரன் என்றதொரு நாளேடு (பத்திரிக்கை) வந்து கொண்டிருந்தது. அந்தப் பேப்பரில் இடைமடிப்புப் பகுதியில் அகலமான வெற்றிடம் இருக்கும். எம்பெருமான் அதைக் கத்தரித்து எடுத்துக் கொள்வார்கள். அதில் பாசுரங்களை எழுதிச் சுருட்டி லங்கோடு கட்டும் நாடாக் கயிற்றில் இடையில் செருகி வைத்து, பின் தாங்கள் குடியிருக்கும் கூரையில் செருகி வைத்து விடுவார்கள். இவற்றைப் பக்குவமாக சேகரித்து வைத்தவர், ஆண்டவர்களின் முதல் பெண் சீடராகிய ஞான வீராங்கனை உம்முல்மா அம்மையார்.

எங்கள் தேவகோமான் அவர்கள் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நான்கு கவிகளும் பொழியும் நாற்கவி ராஜ சிங்கம்.

ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நான்கு வகைப்பாக்களும் அவற்றின் துறை, தாழிசை, விருத்தங்களும், சந்தக்கவிகள், அளபெடைத் தொடை, பூரண வண்ணப்பாக்கள், கண்ணிகள், ஈடு இணைகூற வியலாத மகா உன்னதமான நடை மிளிரும் உரைநடைப் பகுதிகள், அனைத்தையும் இயற்றி அருள்பாலித்தர்கள்.

அனைத்தையும் தொகுத்து, கர்த்தாதி கர்த்தர், அனந்தர் குலத் தனித் தலைமைப் பெரும்பதி, மெய்வழி சாலை ஆண்டவர்கள் இச்செகத்து மனுமக்களுக்கு ஜீவப்பரிசாக ஆதி மெய் உதய பூரணவேதாந்தம் என்ற திருநாமத்தில் 1962ம் ஆண்டு வெளியிட்டருளினார்கள். பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களால் அருளப் பெற்ற இது "முதல் நூல்".

வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் - என்பது தொல்காப்பியம்.

வினையின் நீங்கியவரும், விளங்கிய அறிவுடயவருமாகிய இறைவன் எழுதுவதே "முதல் நூல்", பிற அவற்றின் சார்பு நூல். எங்கள் தெய்வம், இயற்றித் தொகுத்தளித்த ஆதிமெய் உதய பூரண வேதாந்த நூலின் முகப்பில், "மானெடுங் காலங் கொண்ட இப்பூ மண்டலத்திற்கே பாரவான்களின் தீர்க்கதரிசனச் செயல் கைகொண்டேறி வருகின்ற கிரந்தம் - இது ஒன்றுதான் - முதல்நூல் என்று திட்டமாக மக்களினங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அச்சிட்டுக் கொருத்திருப்பதன் மூலம், "தாங்கள் யார்" என்பதை எம்பெருமானார் சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நூலில் மற்ற நூல்களில் இல்லாத மாபெரும் சிறப்பு ஒன்று உண்டு. மற்ற நூல்களில் முதற் குறிப்பு அகராதி முதலெழுத்து அகர வரிசைப்படி மோனைத்தொடை அகராதியாக அச்சிடப் பெற்றிருக்கும். ஆயின் இதில் இரண்டாம் எழுத்து அகரவரிசைப்படுத்தி எதுகைத் தொடை அகராதியாக அச்சிடப்பெற்றுள்ளது.


இந்நூலுக்கு விலை நிர்ணயம் ஆண்டவர்களிடம் விண்ணப்பித்த போது "வையகத்தையும் வானகத்தையும் சர்வ கால காலங்களையும் சர்வ காலத்திற்குள் அடங்கிய அழிவிலா நித்திய பூரண மேம்பாடுகள் அனைத்தையும் கையில் வரவழைத்துத் தரும் கிரயத்தை உடையது இந்நூல்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள்.

No comments: